Datasets:

Modalities:
Text
Formats:
csv
Libraries:
Datasets
pandas
License:
Search is not available for this dataset
செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். குறிப்புரை: துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் - பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது - உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால் போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும். கருத்து: செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விளக்கம்: பொருள் நல்ல வழியில் வரவேண்டும் என்பது தோன்றத் ‘துகள் தீர்' என்றும், செல்வம் தோன்றுவது உறுதியன்று என்பது தோன்றத் ‘தோன்றியக்கால்' என்றுங் கூறினார். பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான செல்வம் ; வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது குறிப்பு. தோன்றியக்கால் ஒற்று மிகுந்தமையால் வினையெச்சமாகப் பொருள் கொள்ளப்படும். பகடு - கடா ; இங்கே அது பூட்டிய ஏர். நடந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருளில் வந்தது ; ஆகவே, ‘நடந்ததனால் உண்டான' என்று உரைத்துக் கொள்ள வேண்டும். பல்லார், பல பிரிவினர் என்பது காட்டும் ; அவர் விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர், அகடு - உறுதி. யார்மாட்டும் என்றது. எவ்வளவு விழிப்புடையவரிடத்தும் என்பது. நில்லாது - நில்லாமல், வரும் - கை மாறி மாறி வரும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. குறிப்புரை: யானை எருத்தம் பொலிய - யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடை நிழலில சேனைத் தலைவராய் - பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் - ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனைவினை உலப்ப - மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள - தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் - முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர். கருத்து: அரசரும் வறியராவர். விளக்கம்: இவர் ஏறியதனால் யானையின் கழுத்துக்கு அழகு உண்டாயிற்று என்று குறிப்பதனால் இவரது பெருமை சிறப்பிக்கப்பட்டது. ‘நிழற் கீழ்' என்பதிற் ‘கீழ்' ஏழாவதன் உருபு. ஏனை வினை - மற்றை வினை ; அது தீவினை என்னுங் குறிப்பில் வந்தது. ‘உலப்ப' என்னும் வினையெச்சம் காரணப் பொருளுள்ளது. மனையாளையும் என்று உம்மை விரித்துக் கொள்வது சிறப்பு. யானை யெருத்தத்திற் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால் ஏனையோர் நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளுதலைவிட இழிவானதொன்று வேறின்மையின், அடியோடு ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை நின்றன நின்றன நில்லா எனவுணர்ந் தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. குறிப்புரை: வாழ்நாள் - உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான் ; ஆதலால் ; நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என - நிலைபெறா என்று, உணர்ந்து - தெரிந்து, ஒன்றின ஒன்றின - இசைந்தன இசைந்தனவாகிய அறங்கைள, செயின் - செய்யக் கருதுவீர்களானால், வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக. கருத்து: வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப் பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும். விளக்கம்: ஒல்லும் அளவு அறஞ் செய்க என்றற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின் அருமை தோன்றச் ‘செயின்' எனவுங் கூறினார். ‘செல்கின்றன' என்னுங் கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ் சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும், "கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும் நச்சினார்க்கினியருரை இங்கே நினைவு கூரற்பாலது. தொல், புறத்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம். குறிப்புரை: என் ஆனும் ஒன்று - யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் - தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா - இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார். கருத்து: இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர். விளக்கம்: சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாயிருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது ; அஃதாவது, பெற்ற உடனே என்பது ; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். குறிப்புரை: இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள். கருத்து: குறித்த ஆயுளுக்குமேல் யாரும் உயிர் வாழ்தல் கூடாமையின் , உடனே அறஞ்செய்து நலம்பெறுதல் வேண்டும். விளக்கம்: இழைத்த - உண்டாக்கிய ; வைத்தீர், இங்கே பெயர். தழீஇம் தழீஇம் என்பது ஒலிக்குறிப்பு. படும் - ஒலிக்கும் ; இறப்பு நேரும் என்றற்குத் ‘தண்ணம் படும்' என்றார். தமக்கு வேண்டிய அளவுக்குமேற் பொருள் படைத்திருப்பவர், அங்ஙனம் மேற்பட்ட பொருளைப் பிறர்க்கு வழங்குங் கட்டாயமுடைய ராதலின், இச்செய்யுள் அவரை நோக்கிற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். குறிப்புரை: கூற்றம் - யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக - நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் - உம் வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் - மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும் - அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் - பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர். கருத்து: அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக. விளக்கம்: ஞாயிறு தோன்றுதலும் மறைதலுமே ஒரு நாளுக்கு அடையாளமாதலால், அது ‘தோற்றம் சால்' என்னும் அடைமொழி கொடுத்து, அளவு கருவியாக உருவகஞ் செய்யப்பட்டது. பகலவனை நாழியாகக் கொண்டமையால் , கூற்றுவன் உண்ணுவதற்கு, நாள் தானியமாகக் கொள்ளப்பட்டது. ‘ஒறுக்குங்' குறிப்புத் தோன்ற, ‘உண்ணும்' என்றார், ‘பிறவாதாரில் ' என்பதன் பின் ஒரு சொல் வருவித்துக் கொள்க. உயிர் அருள்வடிவாகுமளவும் அறஞ்செய்து கொண்டேயிருக்க என்றற்கு ‘ஆற்ற அறஞ்செய்து' எனப்பட்டது. "அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல்" என்பதனாலும் இக்கருத்து அறிந்துகொள்ளப்படும். குறள், ,
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும். குறிப்புரை: செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத - தாம் இனிச் செல்லவிருக்கும் மறுமையுலகத்தை நினையாத, புல் அறிவாளர் பெரு செல்வம் - சிறிய அறிவுடையவரது மிக்க செல்வம், எல்லில் - இரவில், கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி - கரியமேகம் வாய் திறந்ததனாலுண்டான மின்னலைப்போலச் சிறிதுகாலந் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் - இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோம். கருத்து: மறுமையுலகத்தை எண்ணி வாழாதவர்களுடைய செல்வம், மின்னலைப்போல தோன்றி அழியும். விளக்கம்: செல்உழி - செல்லும் இடம் ; இங்கே மறுமை குறித்து நின்றது. செல்லுழி என்பது ‘செல்வுழி ' என மருவி முடிந்தது ; "எல்லா மொழிக்கும்" என்னுந் தொல்காப்பிய நூற்பாவின் நச்சினார்க்கினியருரை கருதுக. அறியாமையில் மிளிருஞ் செல்வமாதலின், இருளில் ஒளிரும் மின் உவமையாயிற்று. கொண்மூ நீரைக்கொள்வது என்னுங காரணப் பெயர். மின்னு ; மின்னுதல் என்னுந் தொழிற் பெயரில் வந்தமையின் அப்பொருள் தோன்ற உகரச்சாரியை பெற்று, அதுவே பின் தொழிலாகு பெயராயிற்று. மருங்கும் என எச்சவும்மை கொள்க. செல்வம் இயல்பாகவே நிலையாமை யுடையதாயினும் அது மின்னலைப்போல் அத்தனை விரைவில் அழிந்து போதற்குக் காரணம், ‘செல்வர் யாம் ' என்னுஞ் செருக்கும் , அச்செருக்கினால் மறுமையைப் பொருள் செய்து வாழாத தாறுமாறான வாழ்க்கைநிலையும் முதலாயின வென்பது இச் செய்யுட் குறிப்பு . தொல் . புண
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ இழந்தானஎன் றெண்ணப் படும். குறிப்புரை: உண்ணான் - இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் - மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் - பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், துன் அருகேளிர் துயர் களையான் - நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் - இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் - ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று - ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, எண்ணப்படும் - கருதப்படுவான். கருத்து: ஒரு செல்வன், தனது செல்வத்தை அறவழிகளிற் செலவு செய்யாதிருந்தால் அவன் அதனை இழந்தவனாகவே கருதப்படுவான். விளக்கம்: ஒளி - மதிப்பு ; "ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை" என்னுமிடத்து, ‘ஒளி - மிக்குத் தோன்றுதலுடைமை' என்பர் பரிமேலழகர் . உண்ணான் முதலியன முற்றெச்சம். ‘கொன்னே காத்திருப்பானேல்' என்று சேர்த்துக்கொள்க. அ ஆ: இரக்கக் குறிப்பு . செல்வம்தான் இறக்குமளவும் அழியாமலிந்தாலும் அதனாற்கொண்ட பயன் யாதொன்று மில்லாமையின், அவன் உடையவனா யினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை நினைவிருத்துதற்குரியது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் செல்வம் நிலையாமை உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. குறிப்புரை: வான் தோய் - வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட - மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் - நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் - உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல் அறமும் செய்யார் - அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது - வறிய வர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் - பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் - அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி - அதற்குச் சான்று. கருத்து: அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர். விளக்கம்: கள்ளர் பகைவர் முதலியோராற் கட்டாயம் இழந்து விடுவர் என்பது கருத்து; அதன் பொருட்டே, கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடுந் தேனீ உவமையாயிற்று. உடாமையும் உண்ணாமையுங் காரணமாக நோய் முதலியவற்றை உண்டாக்கித் தம் உடம்பை வருத்திக்கோடலின், ‘தம் உடம்பு செற்றும்' என்றார். துறவோரைப் போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர்போல் அறச்செயலேனுஞ் செய்கின்றனரோவெனின் அதுவுமின்றென்றற்குக். ‘கெடாதநல் அறமுஞ்செய்யார்' என்று அதன்பிற் கூறினார். மலைநாட என்று ஓர் ஆண்மகனை முன்னிலைப் படுத்திக் கூறும் முறைமையில் இச் செய்யுள் அமைந்தது. இறுக்க நினைவினாற், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல் முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். குறிப்புரை: நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார், புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே - குற்றம் நீங்குதலில்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் - மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள். கருத்து: இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள். விளக்கம்: ‘நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன. துறத்தல் - பற்றுள்ளம் விடுதல். ‘புரை தீரா' ‘மன்னா' இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் - இங்கு நுகர்தல ; இளமையை அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்படும் . ‘பட்டாங்கு' என்பதுபோல, ‘இன்னாங்கு' என்பதும் ஒரு சொல். பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள். அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. குறிப்புரை: நட்பு நார் அற்றன - நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் - சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன - பொது மக்களிடம் உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன, உள் காணாய் - அகமாக எண்ணிப் பார், வாழ்தலின் ஊதியம் என் உண்டு - இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு, ஆழ்கலத்து அன்ன கலி வந்தது - கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம் இதோ வருகின்றது. கருத்து: இளமையையே பொருள் செய்து வாழ்வதனால், நண்பர் சான்றோர் பொதுமக்கள் முதலியோரது தொடர்பு குறைந்து வாழ்நாளுங் கெடும். விளக்கம்: அற்றன அவிழ்ந்தன என்று பன்மையாக வந்தமையால், நட்புகள் அன்புகள் என்று அவ்வினைகளின் வினைமுதல்களையும் பன்மையாகக் கொள்க ; பலராற் பலவகையாகக் கொள்ளப்படுதலால் அவை பன்மையாயின. அன்பு என்றது, அற்பு என்றாயிற்று ! இடையிலுள்ள எழுத்து வலித்தது. இளமையைப் பொருளாக நினைத்துப் பற்றுள்ளத்தோடு உயிர் வாழ்ந்தமையால், நண்பர் முதலியோர் அற்றனர். இங்ஙனம் நட்பு முதலியன அகல ஒருவன் உயிர் வாழ்தலால் உண்டான பயன்றானும் ஏதுமில்லை. கடலுள் மரக்கலம் ஆழ்ந்தாற்போல இவ்வுடம்பு திடுமெனக் கூற்றுவன்வாய் அழிவதுதான் அதனாற் கண்ட பயன் என்றற்கு ‘வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி ' என்றார். வந்தது என இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு. குறிப்புரை: சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று - பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் - இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும், இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு - மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - மெய்யின்ப நெறியில் செல்லும் வகை, இல்லையே - உண்டாவதில்லை. கருத்து: வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை. விளக்கம்: பண்டம் - பொருள் ; இங்கே உடம்புக்கு வந்தது. உயிரிருந்தும் உயிர்க்குரிய அறவினைகட்குப் பயன்படாமையால் உயிரில்லாததுபோல இழிவாக்கிப் பண்டம் என்றார். அது பழிக்கப்படுதலாவது இறக்குமுன் நெடுங்காலம் நோய் முதலியன கொண்டு பிறரால் இழித்துக் கூறப்படுதல். ‘பண்டம் பழிகாறும்' என்றது , சாகு மளவும் என்னும் குறிப்பின்மேல் நின்றது. மனைவியின்பால் அறிவான் அன்புறாமற் காமத்தான் பற்றுக்கொள்ள லென்பது, ‘செறிந்து' என்பதன் குறிப்பினாற் பெறப்படும். இல்லையே என்னும் ஏகாரம் இரக்கப் பொருட்டு.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. குறிப்புரை: தாழா - முதுகு தாழ்ந்து , தளரா - உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா - தலை நடுங்கி, தண்டு ஊன்றா - கையில் தடி ஊன்றி, வீழா - விழுந்து, இறக்கும் - இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும் - இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா - உறுதியான அறிவில்லாத, மம்மர்கொள் மாந்தர்க்கு - காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல் - அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல், அம்மனைக்கோல் ஆகிய ஞான்று - அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில், அணங்கு ஆகும் - வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும். கருத்து: முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலைநடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது. விளக்கம்: முதுகு வளைந்து கூன் அடைந்து என்றதற்குத் தாழா எனப்பட்டது. ‘இவள் மாட்டும்' என்னும் உம்மை இழிவு சிறப்பொடு எச்சமும் உணர்த்திற்று. காழ் - உரம் ; இங்கே அறிவு உரம். அணங்கு - வருத்தும் அழகுருவம் ; பரிமேலழகர், "அணங்கு காமநெறியான் உயிர் கொள்ளுந் தெய்வமகள்"என்றதும் இப்பொருட்டு. அணங்கா யிருந்திருக்கும் என்னும் பொருளில் "அணங்காகும் " என வந்தது. இப்போது மூத்திருக்கும் இவள் கையின் கோல் இவள் தாயின் கையில் ஊன்றுகோலாயிருந்த போது இவள் இளமையுடையவளாய் இருந்திருப்பாள் என்பது குறிக்கத் ‘தன்கைக்கோல் அம்மனைக் கோலாகிய ஞான்று' எனப்பட்டது. இவள் இளமைக் காலத்தில் என்று குறித்தற்கு இங்ஙனம் வந்தது ; ஈதுகாண் உலகியல்பு என்று அறிவுறுத்துதற்கு. இது மேற் செய்யுளாலும் உணரப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய் ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண் டேகும் அளித்திவ் வுலகு. குறிப்புரை: எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் நாடி - தனக்குத் தாய் விரும்பி, சென்றாள் - இறந்துபோனாள் ; தனக்குத் தாய் ஆகியவளும் - அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும், அது ஆனால் - அவ்வாறே போனால், தாய் தாய்க்கொண்டு - ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு , ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க. கருத்து: இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாதென்பது திண்ணம். விளக்கம்: ‘இட்டு' என்னுஞ் சொல், ‘என்னை இங்கே பெற்றெடுத்து விட்டுத் தன்னை ஒருத்தி பெற்றெடுக்கு மாறு பிரிந்தாள்' என்னுங் குறிப்பின் உறுப்பாய் நின்றது. ஏஇசைநிறை. தாய்க்கொண்டு - தாவிக்கொண்டு. இயல்பாயிருத்தலின், உலகுக்கு எளிமை கூறினார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். குறிப்புரை: வெறி அயர் வெம் களத்து - வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி - வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் இடையிடையே பொருந்திய மணமமைந்த மலர்மாலை, முன்னர் தயங்க - தன்னெதிரில் விளங்கா நிற்க, மறி - அதைக் கண்ட பலி ஆடு, குளகு உண்டு அன்ன - அதிலுள்ள தளிரைத் தனக்கு உணவாக உண்டு மகிழ்ந்தாற் போன்ற. மன்னா மகிழ்ச்சி - இளமையால் வரும் நிலையா மகிழ்ச்சி, அறிவுடையாளர்கண் இல் -அறிவுடையாரிடத்தில் இல்லை. கருத்து: அறிவுடையவர்கள், இளமை யெழுச்சிகளை அறவினைகட்கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரே யல்லால் அவற்றை நுகர்ந்து களியார். விளக்கம்: வெறி - தெய்வமேறி யாடுந் தன்மை ; அயர்தல் - அதனைச் செய்தல் ; பலியிடுதலின், கொடிய களமாயிற்று. வேலைத் தன்கையில் அடையாளமாகப் பிடித்துக் கொண்டு ஆடும் மகனாதலில். வெறியாட்டாளன் ‘வேல மகன்' எனப்பட்டான் ; வேலன் என்று கூறுதலும் உண்டு; இது குறிஞ்சி நிலத்து வழக்கம் ; அங்கே முருகன் தெய்வமாகலின் இங்ஙனமாயிற்று. பூக்களுடன் இடையிடையே இலைகளும் இட்டு மாலை தொடுப்பராகலின், ‘முறி ஆர் நறுங்கண்ணி ' எனப்பட்டது. குளகு - தழையுணவு. பலிக்கடா, தான் கொலையுறுதற்கு அடையாளமாயுள்ள வேலன் கை மாலைக்கு அஞ்சாமல். அறியாமையால் அதிலுள்ள தழையைத் தனக்கு உணவாகக் கருதி உண்டு' சின்னேர இன்பம் நுகர்ந்தது ; அறிந்தோர்க்கு அச்செயல் ஏழைமையுடையதாய்த் தோன்றும். இளமையெழுச்சிகளின் மயங்கி, ‘மற்றறிவாம் நல்வினை யாம் இளையம்' என்று மக்கள் ஒழுகுதலும் அத்தகையதேயாம் பின்வரும் பேரிடையூறு கருதாமற் சிறிதின்ப நுகர்வுக்காக அறவினைகள் கைவிட்டு நிற்றல் தவறென்பது உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோல்கண்ண ளாகும் குனிந்து. குறிப்புரை: இளமை - இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று - பழங்க ளுதிர்ந்து வீழ்ந்தாற்போலுந் தன்மையது ; இவளும் குனிந்து - இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, கோல் கண்ணள் ஆகும் - வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் ; வேல் கண்ணள் என்று - இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று, இவளை - இந்த இளந்தன்மையாளை. நனி பெரிதும் வெஃகன்மின் - மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம். கருத்து: இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும். விளக்கம்: உவமையிற் சுட்டிய தன்மைகள் பொருளுக்கும் ஒக்கும். இளமை யாவர்க்கும் ஒரு படித்தாய்க் கெடுதலின், ‘மரமெல்லாம்' என்றார். வீழ்தலின் லிரைவு தோன்ற ‘உதிர்ந்து வீழ்ந்தற்று' என்றார். "நனிபெரிதும்" ஒரு பொருளில் வந்த இருசொல் ; அது வெஃகுதலின் முடிவின்மையையும் இளமைத் தன்மையை அளவாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கடமையையுங் குறித்துநின்றது. இவள் என்னுஞ் சுட்டுக்கள் இரண்டுள் முன்னது ஒரு மாதையும் பின்னது அவள் இளமைப் பண்பையுஞ் சுட்டி நின்றன. கோல்கொண்டு வழி தெரிந்து செல்லுதலின் ‘கோல் கண்ணள்' எனப்பட்டது. மற்று: வினைமாற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். குறிப்புரை: பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை - பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ - இரண்டு பிடியேனும் உண்கின்றீர்களா, என்று வரிசையால் - என்று ஒன்றன்பின் ஒன்றாக, உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - இங்ஙனம் பிறரைப்பற்றித் தமக்குள் ஆராயும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதனால், யாக்கைக் கோள் - உடம்பின் இளமையை, எண்ணார் அறிவுடையார் - அறிவுடையோர் ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள். கருத்து: இளமை கழிதலை யாரும் தமக்குள் உணர்தலின், அறிவுடையோர் அந் நிலையா இளமையை ஒரு பொருளாக மதித்து மகிழார். விளக்கம்: வயது என்பது இத்தனை ஆண்டுகள் என்னுங் கருத்தில் வந்தமையின், ‘உள' என்று பன்மை வினைகொண்டது . ‘பல்லின் பால்' என்பதிற் ‘பால்' தன்மை யென்னும் பொருட்டு ; ‘பான்மை' என்பதிற் போல. சிகையும் - சிகையேனும், ஆண்டு முதிர்ந்து பல்பழுதாகிக் குடலுங் கெடுதலின் இங்ஙனம் ஒருவரைப்பற்றி ஒருவர் நலம் உசாவும்உள் எண்ணம் கொள்ளப்படுகின்றது. யாக்கைக் கோள் - யாக்கையின் தன்மை ; இளமை, இவ்வாற்றால் , இளமை நிலையாமை உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்; முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு. குறிப்புரை: மற்று அறிவாம் நல்வினை - நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் - இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், என்னாது - என்று கருதாமல், கைத்து உண்டாம் போழ்தே - கையில் பொருள் உண்டானபொழுதே. கரவாது அறம் செய்ம்மின் - ஒளியாமல் அறஞ் செய்யுங்கள் ; ஏனென்றால், முற்றியிருந்த கனி ஒழிய - பழுத்திருந்த பழங்களேயல்லாமல், தீ வளியால் - கோடைக் காற்றினால், நல் காய் உதிர்தலும் உண்டு - வலிய காய்களும் மரங்களிலிருந்து விடுதலுண்டு. கருத்து: மூத்தோரே யல்லாமல் இளையோரும் திடுமென இறந்துபோதல் உண்டாகலின், கையிற் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும். விளக்கம்: ‘யாம் இளையம்' என்ற குறிப்பு ‘இப்போது யாம் இளமையுடையேம் ; அவ்விளமை யின் பங்கள் நுகர்தற்குப் பொருள் தேவை ; ஆதலின் , அறவினைகளை மூப்பு வந்தபின் செய்வேம்,' என்று நினைத்தலாகாது என்னுங் கருத்தை உட்கொண்டு நின்றது. கைத்து - கையிலுள்ளது ; அது கைப்பொருள் ; செல்வம். இளமைப் பருவத்தைக் ‘கைத்துண்டாம் போழ்து, என்று விதந்தார். அப்பருவமே முயன்று பொருள் தேடுதற்குரிய காலமாகலின், ‘கனியொழிய' என்பதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, பழங்கள் உதிராமல் மரத்தில் நிற்கக் , காய்கள் உதிர்ந்துவிடுதலும் உண்டு எனவும் ஒரு கருத்துக்கொள்க. மூப்புடையோர் இறவாமுன் இளமையுடையோர் இறந்து போதலும் உண்டு என்பது இதன் கருத்து. காயுதிர்தல் சிறுபான்மையாகலின், காயுதிர்தலும் என எதிர்மறையும்மை கொடுக்கப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. குறிப்புரை: ஆள் பார்த்து - தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் - அதே வேலையாகத் திரிகின்ற, அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத கூற்றுவன், உண்மையால் - ஒருவன் இருக்கின்றானாதலால், தோள் கோப்பு - மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை, காலத்தால் - இளமையாகிய தக்க காலத்திலேயே , கொண்டு உய்ம்மின் - உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள், பீள் பிதுக்கி - முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, பிள்ளையை - குழந்தையை, தாய் அலறக் கோடலான் - தாய் அலறியழும் படி உயிர் கொள்ளுதலால், அதன் கள்ளம் - அக்கூற்றுவனது கடுமையை, கடைப்பிடித்தல் நன்று - நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது. கருத்து: இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும். விளக்கம்: கூற்றுவன் கருத்தாயிருக்கி றானென்பதற்கு ‘ஆட் பார்த்து' எனவும், அதுவே வேலையாயிருக்கிறானென்பதற்கு ‘உழலும்' எனவும், கடமையைச் செலுத்தும் போது கண்ணோட்டங் குறுக்கிட இடந்தரான் என்பதற்கு ‘அருள்இல்' எனவும், உயிரை மட்டும் உடம்பினின்று பிரித்துக்கொண்டு போவான் என்பதற்குக் ‘கூற்று' எனவும், அவன் என்றும் உள்ளான் என்பதற்கு ‘உண்மையால்' எனவும் , உயிருடன் நெடுகச் செல்லத்தகுந்த புண்ணியத்தைத் தேடுமின் என்பதற்குத் ‘தோட்கோப்புக் கொண்டுய்ம்மின்' எனவுங் கூறினார். பீள் - முதிராக் கருப்பம். கள்ளம் என்றது இங்கே ‘உள் எண்ணம்' என்னும் பொருளில் வந்தது. கூற்றுவன் தன் உட்கருத்தை உறுதியாகச் செய்தே முடித்தலின், அக்கடுமை தோன்றக் ‘கள்ளம்' என்றார். தோள் கோப்பு - தோளில் கோத்துச் செல்லுங்கட்டுணா. மறுமையாகிய வழிக்கு அதுபோல் உதவும் புண்ணியத்தை அச்சொல்லாற் கூறினார். "கூற்றங் கொண்டோடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின், ஆற்றுணாக் கொள்ளீர்," என்றார் சிந்தாமணியினும், காலத்தாலேயே என்னுந் தேற்றேகாரமும், பீளையும் என்னும் இழிவு சிறப்பும்மையும் விகாரத்தால் தொக்கன. சிந்
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில். குறிப்புரை: மலைமிசை தோன்றும் மதியம்போல் - மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற அரசரும் , நிலமிசை - இந் நிலத்தில் , துஞ்சினார் என்று -இறந்து மண்ணானார் என்று, எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் - குறித்து இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், எஞ்சினார் இவ்வுலகத்து இல் - இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை. கருத்து: மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல் உறுதியாதலின், இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க. விளக்கம்: ‘யானைத் தலை' என்றதற்கேற்ப உவமையிலும் ‘மலையின் உச்சி' யென்று உரைத்துக் கொள்க. குடையர் - குடையையுடையராய் அதன் நிழலில் இருக்கும் அரசர். குடையரும் என உயர்வுசிறப்புக் கொள்க. இறுதியில் ‘இவ்வுலகத்து' என வருதலின் ‘நிலமிசை' யென்றது. மண்ணில் என்னும் பொருட்டு, மண்ணில் வீழ்ந்து மண்ணோடு மண்ணானார் என்பது குறிப்பு. எத்துணை உயரத்தில் ஏறிச் சென்றோர்க்கும் முடிவில் இருப்பிடம் மண்ணே எனவும் ஒரு நயம் காண்க. எனவே ஏனையோர் இறத்தல் பற்றிக் கூற வேண்டாதாயிற்று. இறந்தாரென்னுஞ் சொல் இழிவு தருதலின், தூற்றப்பட்டார் எனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும் நிலவார் நிலமிசை மேல். குறிப்புரை: வாழ்நாட்கு - ஆயுள்நாட்களுக்கு, அலகா - அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் - விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம், வீழ்நாள் படாது எழுதலால் - வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால், வாழ்நாள் உலவாமுன் - அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப்போகுமுன், ஒப்புரவு ஆற்றுமின் - உதவி செய்யுங்கள்; மேல் - அந்த ஆயுள் நாளுக்குமேல், யாரும் நிலவார் நிலமிசை - யாரும் இவ்வுலகத்தில் நிலைக்கமாட்டார்கள். கருத்து: கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ் செய்துகொள்க. விளக்கம்: அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில் , அலகு - அளவு ; ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு ‘வீழ்நாள் படாது' எனப்பட்டது. வீழ்நாள்; தவறும் நாள் ; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள். நிலவார் என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார் எனப பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை மன்றம் கறங்க மணப்பாறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். குறிப்புரை: மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின - திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே - திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய் பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று - சாவுமேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக் கருதி, உய்ந்து போம் ஆறே - நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார் மனம் - அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப. கருத்து: மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க. விளக்கம்: மன்றம் - அவை ; இங்கே, திருமணப் பேரவை, மணமக்கள் ஆணும் பெண்ணுமாயிருத்தலின் அவ்விருபாலார்க்கும் பொருந்த ‘அவர்க்கு' எனப் பலர் பாலாற் கூறினார். பெரும்பான்மை யன்றாகலின் ‘ஒலித்தலும் உண்டாம்' என்னும் உம்மை எதிர்மறை. ‘உய்ந்து போம் ஆறு' ,என்றது, பொதுவாக அறவழி. ஏகாரம்: பிரிநிலை. இளமையைத் துய்ப்பதா அறவழியிற் செல்வதா என இருதலைப்பட்டு ஐயுறும்போது, மாட்சிமைப்பட்டாரது மனம் அறவழியின் பக்கமே ஈர்ப்புறும் என்னும் இயல்பை ‘வலிக்கும்' என்னும் ஒரு சொல்லால் விளங்க வைத்தார். வலிக்குமாம் என்பதில் ‘ஆம்' என்ப என்னுங் குறிப்பினது ; அன்றி, அசையெனலும் ஒக்கும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. குறிப்புரை: சென்று - இறந்தவர் வீட்டுக்குப் போய், எறிப ஒரு கால் - பறையடிப்போர் ஒருமுறை பறைகொட்டுவர், சிறுவரை நின்று - சிறிது பொழுது நிறுத்தி, எறிப பறையினை - மீண்டும் அச் சாவுமேளத்தைக் கொட்டுவர், முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் முறையாகக் கொட்டுமுன், செத்தாரைச் சாவார் சுமந்து - இறந்தவரை இனி இறப்பவர் சுமந்துகொண்டு, மூடி தீ கொண்டு எழுவர் - துணியால் மூடித் தீயைக் கைக்கொண்டு இடுகாட்டுக்குப் புறப்படுவர், நன்றே - இந்நிலை இன்பந் தருவதோ, காண் - எண்ணுக. கருத்து: இறந்த பின்னும் உடல் சிறிது நேரமேனும் வீட்டிலிருக்க இடமில்லாமையின், யாக்கையின் நிலையாமையைக் கருதி, உடனே அறவழிக்கண் நிற்க. விளக்கம்: நன்றே என்னும் ஏகாரம் எதிர்மறை ஏனைய அசை . வரை- பொழுதின் அளவு ; சிறுவரை - சிறு பொழுதளவு. நின்று - நிறுத்தி என்னும் பொருட்டு, முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் பொழுதின் கொட்டுதலுக்குள். சுமந்து எழுவர் என்று கொள்க. சாவார் - சாவோர் ; இவர் நிலையும் இன்னதே என்றதற்குச் ‘சாவார் சுமந்து என அச் சொல்லாலேயே கூறினார். இந்நிலையில்லா வாழ்வை நிலையாக எண்ணி இன்புறுவாரை நோக்கி,இது நன்றாகுமோ நினைமின் என்பார்' நன்றேகாண், என்றார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. குறிப்புரை: கணம் கொண்டு - கூட்டம் கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கல்லென்று அலறி அழ, பிணம் கொண்டு - பிணத்தை எடுத்துக்கொண்டுபோய், காடு உய்ப்பார் கண்டும் - இடுகாட்டிற் கிடத்துவாரை நேரிற் பார்த்தும், மணம் கொண்டு - திருமணம் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் - இவ்வுலகத்தில் இன்பம் உண்டு உண்டு உண்டு என்று கருதிம மயங்குகின்ற மயக்க உணர்வினையுடையானுக்கு, டொண் டொண் டொடு என்னும் பறை - டொண் டொண் டொடு என்று ஒலிக்கின்ற சாவு மேளம், சாற்றும் - அங்ஙனம் ஓரின்பம் இல்லை இல்லை இல்லை என்று சொல்லும். கருத்து: இவ்வுலக வாழ்க்கையை அறவழியிற் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமே யல்லாமல், இதில் இன்பம் உண்டென்று மயங்கலாகாது. விளக்கம்: கணங்கொண்டு, கூடி யென்னும் பொருட்டு. கல்ஒலிக்குறிப்பு . உய்த்தல் - சேர்த்தல். உணர்வினாற்கு என நான்கனுருபு கொள்க. சாற்றுமே, அறிவுறுத்துமே என்பது அடுக்கு துணிவுக்கு , உண்டு உண்டு உண்டு என்றதன் கருத்தை, அவ்வொலி போன்றதொன்றால் ஏளனத்தோடு மறுக்கும் முறையில் டொண் டொண் டொடு என்பது வந்தது ; சாப்பறையின் ஒலி முறையும் இவ்வொலிக் குறிப்போ டிருப்பது அதற்கு இயைந்தது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்; தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். குறிப்புரை: தோல் பையுள் நின்று - தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் - தொழில்களை முடியச் செய்து அவ்வுடம்பை உண்பித்து வருகின்ற, கூத்தன் - கூத்தனை ஒத்த உயிர், புறப்பட்டக்கால் - வெளிப்பட்டு விட்டபின், நார் தொடுத்து ஈர்க்கில் என் - அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகத் தூய்மைசெய்து அடக்கஞ்செய்தால் என்ன, பார்த்துழிப் பெய்யில் என் - கண்ட இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் - அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன ; வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை. கருத்து: உயிர் நீங்கிய பின் உடம்பு இகழப்படுவ தொன்றாதலால், இவ்வுடலை ஓம்பி மகிழ்வதற்காக நற்செயல்களைக் கைவிடற்க. விளக்கம்: பார்த்தஉழி எனப் பிரிக்க; இழிவு தோன்றத் ‘தோற்பை', என்றார். அறச் செய்து என்றது, வேண்டுமளவும் என்னும் பொருட்டு ; இது முயற்சி மிகுதியைக் காட்டிற்று. கூத்தன் என்றார். அசைவோன் அவனே ; இவ்வுடம்பில் ஒன்றுமில்லை ; ஆதலால் இவ்வுடலை ஓம்புதற்காக அவ்வுயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க என்றற்கு. உயிரைக் கூத்தன் என்றது உருவகம்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். குறிப்புரை: படு மழை மொக்குளின் - மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப்போல, பல்காலும் தோன்றிக் கெடும் இது ஓர் யாக்கை - பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற ஓருடம்பு இது. என்று எண்ணி - என்று இதன் இழிவு கருதி, தடுமாற்றம் தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை - இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான அறிவுடையவரை, நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்- ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில் ; ஒருவருமில்லை. கருத்து: யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர். விளக்கம்: மழை படு மொக்குள் என்று மாற்றிக்கொள்க ‘பல்காலும்' என்னுங் குறிப்பால் விரைந்து கெடுதலும் பெறப்படும். உவமையின் இயல்பு பொருளில் விளக்கப்பட்டது. தோன்றிக் கெடுதல் - பிறந்து இறத்தல். இது, ஓர் என்பன, இகழ்ச்சிப்பொருள். தடுமாற்றம், பிறவித் தடுமாற்றம், அது தீர்த்தலாவது, யாக்கை இன்பத்தை ஒரு பொருளாகக் கருதியொழுகாமல், அறவழியில் நின்று மெய்யுணர்ந்து வீடுபெற முயலுதல், மயங்கி வலைப்படாமையின், ‘திண்ணறிவாளர்' என்றார். நோப்பார் யாருமில்லையெனவே, மேம்படுவாரின்மைதானே பெறப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். குறிப்புரை: யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்தாப் பெற்றவர் - உறுதியுடையதாகப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் - தாம் அங்ஙனம் முன் நல்வினையினால் அரிதின் அடைந்த அந் நல்யாக்கையினால் , ஆய பயன் கொள்க- ஆகக்கூடிய புண்ணியப் பயனைக் காலந்தாழாமற் செய்து கொள்க. ஏனென்றால் ; மலை ஆடு மஞ்சுபோல் தோன்றி - மலையுச்சியில் உலவுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, மற்று ஆங்கே நிலையாது நீத்துவிடும் -பின்பு அங்ஙனம் காணப்பட்டபடியே நிலையாமல் இவ்வுடம்பு அழிந்துவிடும். கருத்து: நல்ல யாக்கையை அடையப் பெற்றவர்கள், அதனாலான அறப்பயன்களை உடனே செய்து முடித்துக் கொள்ளவேண்டும். விளக்கம்: யாப்பு - உறுதிநோயில்லாத நல்ல யாக்கையாகப் பெற்றவர்கள் என்பது கருத்து. பெறுதலின் அருமை நோக்கிப் ‘பெற்றவர்' என்றும், தாந்தாம் செய்த முன்னை நல்வினையினாலேயே அதனை அடைதல் கூடுமென்று அங்ஙனம் அடைதலில் இருந்த அருமையை மேலும் வலியுறுத்தக் கருதித் ‘தாம் பெற்ற,' என்றுங் கூறினார். ஆயபயன் - அறம். மேகம் திடுமெனத் தோன்றினாற் போலவே திடுமென அழிந்தும்போம் என்றற்குத் 'தோன்றி ஆங்கே' எனப்பட்டது. மற்றுவினைமாற்று. நீத்துவிடும் என்னுஞ்சொல் அழிந்துவிடும் என்னும் பொருளது. மேகம் நீரிலிருந்து தோன்றி அழகிதாய் வடிவமாய் நிறமாய் ஒளி ஒலிகளோடு பிறர் விரும்பி எதிர்நோக்கும்படி மேன்மையான இடத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்து பின் நீராகவே உருவழிந்து மறைந்துவிடுதல் போல, இவ்வுடம்பும் மண்ணிலிருந்து தோன்றி அழகியதாய் வடிவமாய்ப் பார்வையொளி பேச்சொலிகளோடு பிறர் விரும்பி எதிர் நோக்கும்படி செல்வாக்கான இடத்தில் உலவிக் கொண்டிருந்து பின் மண்ணாகவே உருவழிந்து போகும் என்று உவமையை விரித்துக் கொள்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் எனப்படுத லால். குறிப்புரை: புல் நுனிமேல் நீர்போல் - புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை - யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி - என்று கருதி, இன்இனியே - இப்பொழுதே - இப்பொழுதே, செய்க அறவினை - அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் - இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான். உடனே தன் உறவினர் அலறி அழும் படி இறந்துவிட்டான், எனப்படுதலால் - என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க. கருத்து: புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல் நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க. ‘எனப்படுதலால்' நிலையாமை புல் நுனி மேல் நீர்போல் ஆகும் என்று கூட்டுக. நுனிமேல் - நுனியில் . நீர்- பனிநீர் ; அது துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும் ; யாக்கையின் நிலையாமை அத்தகையது. இனி இனி என்னும் அடுக்கு ‘இன்னனி ' யெனத்திரிந்து நின்றது ; "இன்னினி வாரா" என்றார் பிறரும்; இந்நொடியே என்னும் விரைவுப் பொருளது. நின்றான் இருந்தான் கிடந்தான் சென்றான் என்றதும் மிக்க விரைவு புலப்படுத்துதற்கு. ஐங்,
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. குறிப்புரை: வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல - மாந்தர்கள் - மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி - ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் - பேசாமலே இறந்து போய் விடுவார்கள். கருத்து: சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க. விளக்கம்: ‘வாளாதே' என்னுஞ் சொற்கள் இரண்டனுள் ஒன்று உவமத்துக்கும் ஒன்று பொருளுக்குங் கொள்க. மரம் மரன் என வந்தது போலி. சேண் நீங்கு என்னுங் குறிப்பால், திரும்பாமை புலப்பட்டது. புட்களில் அங்ஙனம் சேண் நீங்கிவிடும் புட்களே ஈண்டைக்கு உவமை. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தற்காகக் கூடுகட்டியிருந்து வினை முடிந்தபின் அக்கூட்டைவிட்டுச் சேண் நீங்கிவிடும் புட்கள் இவ்வுவமத்துக்குப் பொருந்தும் ; உயிரும் பிறர்க்குப் பயன்படும் பொருட்டே இவ்வுடம்பெடுத்துத் தங்குதலின் ஈது ஒக்கும். அதனாற்றான், கேளாதே வந்து வாளாதே போவர்; தமரின் பொருட்டு எடுத்த உடலாதலின் அத்தமர்க்கே அது கிடக்கும்படி நீத்து என்றார். ‘மாந்தர்கள் தோன்றிப், புட்போல நீத்துப் போவர்' எனக்கொள்க.

தமிழ் வெண்பாக்கள் ~5000, பதவுரை குறிப்புரையுடன். நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு பக்தி இலக்கியங்கள்

Downloads last month
41