text
stringlengths 1
17.4k
|
---|
இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2022ல் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், காமன்வெல்த் நிகழ்வை புறக்கணிப்பதாக ஐ.ஓ.ஏ அச்சுறுத்தியது. இந்தியாவின் முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். கடந்தமுறை இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தபோது, துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் 16 பதக்கங்களை இந்தியா வென்றது. இந்நிலையில், இந்தியாவின் முடிவு குறித்து, காமன்வெல்த் நிர்வாகிகள் இந்திய காமன்வெல்த் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால், பர்மிங்காமில் நடக்கும் போட்டியின் போது, துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை நிகழ்வுகளை நடத்துவதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு விளையாட்டுகளும் மார்ச் 2022ல் காமன்வெல்த் விளையாட்டு நட்பு திட்டத்தின் கீழ் நடைபெறும். முன்னதாக மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் எஸ்.பி.எஸ் டோமர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) தலைவர் நரிந்தர் பாத்ராவுக்கு ஒரு கடிதம் எழுதி, அதன்மூலம் இந்த தகவலை உறுதிபடுத்தி உள்ளார். |
கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு |
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவர்னர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடன் ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். 2020ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். முன்னதாக காலை 9.30 மணியில் இருந்தே எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சட்டசபை கூட்டத்துக்கு வரத் தொடங்கினர். சரியாக 9.50 மணிக்கு திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் வந்தார். அவருக்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி உற்சாக வரவேற்பளித்தனர். இதை தொடர்ந்து 9.55 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபைக்குள் வந்தார். அவருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்பளித்தனர். சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சரியாக 9.55 மணிக்கு தலைமை செயலக வளாகத்துக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் தனபால், சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து சட்டப் பேரவைக்குள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சரியாக 9.59 மணிக்கு கவர்னர் பேரவைக்குள் வந்தார். அப்போது முதல்வர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடி பேரவைக்குள் வந்தார். அவர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தார். அவர் அருகே போடப்பட்டிருந்த மற்றொரு இருக்கையில் சபாநாயகர் தனபால் அமர்ந்தார். சரியாக 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. இதை தொடர்ந்து கவர்னர் உரையாற்ற எழுந்தார். ‘அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று கூறி தனது உரையை படிக்க முயன்றார். அப்போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘‘சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து’’ தனது கருத்தை பதிவு செய்ய முயன்றார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. அதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து, எதிர்கட்சி தலைவருக்கு மைக் இணைப்பு கொடுக்கும்படி குரல் கொடுத்தனர். அதேநேரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், மு.க.ஸ்டாலினை நோக்கி ‘ஒன் மினிட் ப்ளீஸ்’ என்று கூறி தனது கருத்தை அவருக்கு தெரிவிக்க முயன்றார். ஆனால் மு.க.ஸ்டாலின் அவருக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேநேரம் கவர்னரின் பேச்சுக்கு அதிமுகவினர் மேஜையை தட்டியபடி வரவேற்பு தெரிவித்தபடி இருந்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாவிட்டாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்ற அனைத்து திமுக எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.அதேபோன்று, மனித நேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, அமமுக கட்சி எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆகியோரும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்ததால் பேரவையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினுடன் தினகரன் சந்திப்புசட்டப்பேரவை வளாகத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்தபோது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வந்தார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். திமுக எம்எல்ஏக்களும் தினகரனுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். |
தங்கம் விலை அதிரடியாக உயர்வு சவரன் 31 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் ₹512 எகிறியது |
ஆபரண தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 512 அதிகரித்து, ரூ.31168 ஆக உயர்ந்தது. தொடர் விலை ஏற்றம் நகை பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன்படி உள்நாட்டு சந்தையிலும் ஆபரண தங்கம் விலையை வியாபாரிகள் நிர்ணயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி ஒரு சவரன் ரூ.30,140க்கு விற்கப்பட்டது. இதுவே உச்சபட்ச விலையாக கருதப்பட்டது. அதனை முறியடித்து கடந்த 3ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.79 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,815க்கும், சவரனுக்கு ரூ.632 அதிகரித்து ஒரு சவரன் ரூ.30,520க்கும் விற்கப்பட்டது.தொடர்ந்து 4ம் தேதி கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,832க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.30,656க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாள். அதனால், தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.இந்நிலையில் அமெரிக்க, ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இன்றும் தங்கம் விலை அபரிமிதமாக உயர வாய்ப்புள்ளது. என நகை வியாபாரிகள் ரிவித்திருந்தனர். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவை பழிதீர்ப்போம் என ஈரான் அறிவித்துள்ளதால் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) கடந்த வார இறுதியில் 1,554 டாலராக இருந்தது. இது இன்று அதிகபட்சமாக 1,588.5 டாலராக ஆனது. பின்னர் 1,577 டாலர் வரை குறைந்தது. அதாவது, கடந்த வார இறுதி நாள் விலையை விட ஒரு டிராய் அவுன்சுக்கு சுமார் 34 டாலர் வரை உயர்ந்த தங்கம், காலை நிலவரப்படி சற்று குறைந்து, கடந்த வார இறுதியை விட 24 டாலர் உயர்ந்திருந்தது. மேலும், பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 டாலரை தாண்டியது. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு அதிகரித்ததால், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், இன்று காலை சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து ரூ.3896 ஆகவும் சவரனுக்கு ரூ.512 அதிகரித்து ரூ. 31168 ஆகவும் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. |
சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் இல்லை |
சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால், மாநில அரசு நியமித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்க மாநில அரசின் சார்பில், மேற்குவங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008 கொண்டுவரப்பட்டு, ஒரு ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி, அரசின் நிதிஉதவி பெற்று நடத்தப்படும் மதரஸா பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது, மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரைக்கும் நபர்களையே ஆசிரியர்களாக நியமிக்க முடியும். ஆனால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அதுதொடர்பான வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றுவதற்கும் சில மதரஸா பள்ளி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநில அரசின் ஆணைக்குழு பரிந்துரையின்படி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நியமிக்க முடியவில்லை என்று, பல்வேறு மதரஸாக்களின் நிர்வாகக் குழு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மேற்குவங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008 அரசியலமைப்பிற்கு முரணானது. அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு’ என்று கடந்த 2017ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, புதிய சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மதரஸா தங்கள் விருப்பத்தின்படி அரசின் நிதியை பெற்றுக் கொண்டு செயல்பட முடியாது. அதனால், மாநில அரசின் ஆணைக்குழு நியமித்த ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்’ என்று கோரப்பட்டது. அப்போது, ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியதுடன், இறுதி உத்தரவு வரும் வரை அவர்களை வேலையில் இருந்து நீக்கி, அவர்களுக்கு சம்பளத்தை விடுவிக்க வேண்டாம் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கால், 2,600க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பமுடியாமல் இருந்த நிலையில், மே 2018-இல் உச்சநீதிமன்றம் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மதரஸா சேவை ஆணையச் சட்டம், 2008ன் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகுமா? என்பதை தீர்மானிக்கும் இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அவர்கள் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது. அரசின் உதவியுடன் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தாங்களாகவே ஆசிரியர்கள் உள்ளிட்டோரை நியமிக்க இயலாது. அவர்களுக்கு முழு அதிகாரம் இல்லை’ என்று தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் மாநில அரசு இயற்றிய மேற்குவங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008ன்படி உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது தெளிவாகி உள்ளது. |
வைணவ தலங்களில் கோலாகலம் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் |
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய திருநாளான இன்று ரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என விண்ணதிர கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்து வந்தனர்.108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று (6ம் தேதி) அதிகாலை 4.44மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார். அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றார். பின்னர், அதிகாலை 4.44 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதுசமயம் அங்கு காத்து இருந்த பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். பின்னர் நம்பெருமாள் சந்திரபுஷ்கரிணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியாக ஆலிநாடான் திருச்சுற்றில் உள்ள மணல்வெளி வழியே அகளங்கன் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 5 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு காலை 7.15 மணிக்கு சென்றார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இங்கிருந்தபடி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின்னர் இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 12.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.திருப்பதி கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு முன்னதாக மார்கழி மாத திருப்பாவை சேவை நடந்தது. இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.அதிகாலை 2 மணிமுதல் 4.30 மணி வரை மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து 4.30 மணிக்கு பிறகு இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் ெசார்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.காலை 9மணியளவில் தேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி 32 அடி உயரமுள்ள தங்கரதத்தில் 4மாட வீதியில் பவனி வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தனர். தங்கரதத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு மலையப்பசுவாமியை தரிசனம் செய்தனர்.நாளை துவாதசியையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்கு இடையே புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இதை தொடர்ந்து இரவு 12.30 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் அடைக்கப்படும்.காத்திருந்த பக்தர்கள்ரங்கநாதரை தரிசிக்க வந்த பக்தர்கள் இரவு 9மணி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் அவரவர்களுக்கு உரிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இரவில் கோயிலுக்குள்ளேயே படுத்து தூங்கினர். இரவு 9 மணிக்கு பிறகு கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு வந்த பக்தர்கள் வெளியிலேயே வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்கள் விடிய விடிய கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. காலை 7 மணிக்கு 3 கி.மீ நீளத்திற்கு பக்தர்கள் வரிசை நின்றிருந்தது. |
‘நீட்’ விண்ணப்பிக்க இன்றே கடைசி |
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கோச்சிங் சென்டரில் நீட் பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பர் 31ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் ஜனவரி 6ம் தேதி (இன்று) இரவு 11.50 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணத்தை இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும். |
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 22 ஆந்திர மீனவர்கள் மீட்பு: வெளியுறவு துறை நடவடிக்கை |
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாகக் கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 22 ஆந்திர மீனவர்கள் மீட்கப்பட்டனர்.ஆந்திராவைச் சேர்ந்த 20 மீனவர்கள் சில மாதங்களுக்கு முன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகப் பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப்படையால் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் திட்டமிட்டு பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்பதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அரசிடம் உறுதி செய்ததைத் தொடர்ந்து 22 ஆந்திர மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில், மீட்கப்பட்டவர்கள் போக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 237 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக அந்நாட்டு மாலிர் மாவட்ட சிறை எஸ்பி அவுரங்கசீப் கான் தெரிவித்தார். இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் வைத்து மீட்கப்பட்ட மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. |
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் : சென்னையில் அதிகாலை முதல் மழை |
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இயல்பான அளவை விட அதிக மழை பொழிந்ததால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பின. வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைத்து வருகிறது. தற்போது வெப்பசலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதே நிலை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் கடந்த ஒரு மாதமாக மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. இதனால் சென்னையை பொறுத்தவரை தற்போது வடகிழக்கு பருவமழை முடிவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று மாலை வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவும் சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே நிலை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
ஏர்போர்ட்-கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு : கவர்னர் உரையில் அறிவிப்பு |
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. கூட்டம் தொடங்கியதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதில் கூறியிருப்பதாவது:ஆசிய வங்கி நிதியுதவியுடன் ரூ.6,448 ேகாடி மதிப்பீட்டில் சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தினால் பயனடைய கூடிய பகுதியில் சாலையை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ.2673.42 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான சென்னை வெளிவட்ட சாலையின் திட்டம் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இச்சாலையின் மீதமுள்ள பகுதிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மேற்கொண்ட பல முயற்சியின் பயனாக 2016ம் ஆண்டில் 71431 ஆக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 63923 ஆகவும், சாலை விபத்தில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் 16092ல் இருந்து 2018ம் ஆண்டில் 11378 ஆகவும் முறைந்துள்ளது. சாலை விபத்துக்களில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் இருந்து 10 ஆயிரம் வாகனங்களுக்கு சராசரியாக 12 ஆக இருந்தது. 2019ம் ஆண்டில் இது 3ஆக குறைந்துள்ளது.* நாளொன்றுக்கு 1.63 கோடி பயணிகள் மாநில போக்குவரத்து பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பொது போக்குவரத்தின் பயணத்தின் பங்கை மேலும் அதிகரிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்திய அரசின் (Fame-2) திட்டம் மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவிடன் மாநில போக்குவரத்து கழகங்கள் மின்சார வாகனங்களை பெருமளவில் இயக்க உள்ளன.* சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. திருவொற்றியூர், விம்கோ நகர் வரையிலான முதல்கட்ட நீட்டிப்பு பணிகள் இந்தாண்டு மத்தியில் நிறைவடையும். மேலும் ரூ.69,180 கோடி செலவில் 118.9 கிமீ நீளத்துக்கு 3 வழித்தடங்களை அமைக்கும் 2ம் கட்ட திட்ட பணிகளை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2ம் கட்ட பணியில் 52.01 கிமீ நீளத்துக்கு நிதியுதவி அளித்திட ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்து முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2ம் கட்டத்தின் மீதமுள்ள வழிதடத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டத்தில் 50 சதவீத பங்கு மூலதன தொகையை மத்திய அரசு வழங்கியது போல, 2ம் கட்ட திட்டத்திலும் 50 சதவீத பங்களிப்பிற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்கிட வேண்டும். சாத்திய கூறு ஆய்வின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய புறநகர் பஸ் நிலையம் அமைய இருக்கும் கிளாம்பாக்கம் வரையிலான 15.3 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு 15.5 கிமீ நீளத்துக்கு ரயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும். இதற்கான விரிவான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரிக்கும்.* பிரதம மந்திரியின் நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.31,252.95 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் 6.94 லட்சம் குடியிருப்புகளை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொது கட்டிட மற்றும் வளர்ச்சி விதிகள், இயலக்கூடிய விலையில் வீடுகளை வாங்குவதற்கு உத்வேகத்தை அளித்துள்ளது. * டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க முதல்வரால் அறிவித்தபடி பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் விலையில்லா ெகாசு வலைகள் விநியோகிக்கப்படும்.* ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கான பணிகள் ரூ.3227.25 கோடி செலவில் இந்தாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. * அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மாநில பொது பல்கலைக்கழகமாக இருந்து வருவதன் காரணமாக ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதி நிலையை அடைந்த பின்னரும் கூட, தொடர்ந்து மாநில சட்டத்தின் கீழ் இயங்கும் மாநில இடஒதுக்கீடு கொள்கை தொடர்ந்து அதற்கு பொருந்தும் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும்.* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ஒரு சிறப்பு முயற்சி அரசு தொடங்கி, கல்லூரி இடைநிற்றல் மாணவர்களின் 1 லட்சம் நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் அவர்கள், தங்களது உயர்கல்வி பயிற்சியை நிறைவு செய்யலாம். அல்லது உரிய வேலை வாய்ப்பினை கண்டறியலாம். * 2019-20ம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு, ரூ.12,500 கோடி அளவுக்கு கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.* தமிழக மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் விகிதாச்சாரம் உயர்ந்து வருகிறது. மாதம் ஒன்றுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்கிடும் 5 சமூக பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 29.80 லட்சமாகும். நடப்பாண்டு முதல் தகுதி வாய்ந்த மேலும் 5 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். சமூக பாதுகாப்பு, முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை நிலையை கணக்கிடுவதற்கான அளவுகோலை அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி, பயனாளிகளுக்கு சொந்தமான அசையா சொத்து மதிப்பின் வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அசையா சொத்தின் வரையறையில், இலவச வீடு வழங்கும் திட்டத்தில், அரசிடம் இருந்து பெறப்பட்ட வீடு சேர்க்கப்பட மாட்டாது.* சமூக நீதியை காப்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது. ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக பாதுகாக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுவதுடன் அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், தகுந்த பணியிடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. |
ஆளுனர் உரையை புறக்கணித்தது ஏன்?: மு.க.ஸ்டாலின் பேட்டி |
சட்டப்பேரவையில் இன்று நடந்த ஆளுனர் உரையை புறக்கணித்துவிட்டு எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பிறகு ஸ்டாலின் அளித்த பேட்டி:இன்று ஆளுனர் உரையை புறக்கணித்துவிட்டு திமுக சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம். எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து நாங்கள் ஆளுனர் உரையை புறக்கணித்திருக்கிறோம் என்று சொன்னால், ‘’தமிழக அரசின் கடன் தொகை 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று இப்போது இருக்கக்கூடிய அமைச்சரவை தீர்மானம் போட்டு ஆளுனருக்கு அனுப்பிவைத்தது. ஆனால் இதுவரை ஆளுனரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.இந்த நாட்டின் மதசார்பின்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நேரத்தில், அதிமுக அதை ஆதரித்துள்ளது. இந்த காரணத்தால்தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால் சிறுபான்மையினர், ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அரசு நிர்வாகமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக செயல்பட்டுள்ளது. இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால், புதுக்கோட்டையில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர், எம்எல்ஏக்கள் இருந்த அந்த மேடையில் அரசு அதிகாரியை கீழ்த்தரமாக பேசி, திமுகவை வெற்றிபெற வைத்துவிட்டாய், நாங்கள் சொன்னதுபோல் நீங்கள் கேட்கவில்லை என்று பேசி அதிகாரியை அமைச்சர் விஜயபாஸ்கர் இழிவுபடுத்தியுள்ளார்.நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த 2 நாளுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதே சட்டமன்றத்தில் இரண்டு மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. அதை பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை. ஆனால் திடீரென உச்சநீதிமன்றத்தில் மனு போட்டு பெரிய கபடநாடகம் நடத்தியுள்ளது.நீட் தேர்வால் அனிதா உள்பட 7 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்தனர். ஆனால் இப்போது ஒரு கபட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்ட உரையை புறக்கணிப்பது என்று வெளிநடப்பு செய்துள்ளோம்.கடந்த ஒரு வருடத்துக்கு முன் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி எண்ணிக்கை என்னவென்பது தெரியும். தற்போது 24 எம்பி.க்கள் உள்ளனர். சட்டமன்றத்தில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் 89 உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது 100 உறுப்பினர்கள் உள்ளோம். கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 1007 கவுன்சிலர்கள் இருந்தனர். இப்போது 2 ஆயிரத்து 100 பேர் உள்ளோம். 2011ம் ஆண்டு 30 மாவட்ட கவுன்சிலர்கள் இருந்தனர். இப்போது 243 பேர் உள்ளனர். இது திமுகவுக்கு தேய்பிறையா வளர்பிறையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக்கூடத்தில் தேர்தல் விதிமுறைகள் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். இதனால்தான் தேர்தல் அதிகாரி பழனிசாமி, அவர் சொன்னதை ஏற்று நடக்கிறார் என்று நினைக்கிறேன்.டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். |
வீச்சரிவாளால் வெட்டி ரவுடி கொலை வண்டலூர் ரயில்நிலையத்தில் பதுங்கிய 5 வாலிபர்கள் கைது |
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வீரா (21). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள டீக்கடையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு டீக்கடைக்காரரிடம் வீரா பேசியுள்ளார். அப்போது, டீ குடிக்க வந்தவர்களுக்கும் வீராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் வீராவை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே, டீக்கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வண்டலூர் ரயில்நிலையத்தில் பதுங்கியிருந்த 5 பேர் கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில், அமரவேல் (22), நாகராஜ் (22), ரமேஷ் (25), தினேஷ் (24), ஆலயவான் (25) என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரவுடி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். |
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு கருப்பு சட்டையில் இரு எம்எல்ஏக்கள்: சட்டசபையில் பரபரப்பு |
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் வட மாநிலங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் மற்றும் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் கருப்பு டி.சர்ட் அணிந்து வந்ததால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டவாறு சட்டசபைக்குள் சென்றனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். தமிமுன் அன்சாரி கருப்பு டி.சர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். அவரது டி.சர்ட்டில் நோ சிஏஏ, நோ என்ஆர்சி என்று குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவர் சட்டசபை நுழைவு வாயிலில் நின்று கொண்டு தொடர்ந்து கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதை தொடர்ந்து போலீசார் அவரை உள்ளே செல்லும்படி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து சட்டசபைக்குள் சென்றார். |
தமிழகம்-கர்நாடகம் தேர்வடம் பிடிக்கும் தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில் |
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யானைகள் நடமாட்டம் மிகுந்த பசுமையான வனப்பகுதியில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமைவாய்ந்த பேட்டராய சுவாமி கோயில். போசளக் கட்டிடக்கலையில் அமைந்துள்ள இந்த கோயில், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள். தமிழக மக்கள் சுவாமியை வேட்டையாடிய பிரான் என்று போற்றுகின்றனர். ஆந்திரம், தமிழகம், கர்நாடக மாநிலங்களின் எல்லைப்பகுதி, இது என்பதால் 3 மாநில மக்களும் திரண்டு வந்து வழிபட்டு செல்லும் பெருமையும் பேட்டராய சுவாமிக்கு உண்டு.வேட்டையாடிய பிரான் தேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். ராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோருக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது. வேணுகோபாலன், ருக்மணி, சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார். ஆழ்வார்கள் சன்னதியும், ராமானுஜருக்கு ஒரு தனி சன்னதியும் உள்ளது. திருப்பதியை போலவே இக்கோயிலில் அச்சு அசலாக மூலவர் காட்சியளிப்பதும், அங்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும் இங்கு நடப்பதும் கூடுதல் சிறப்பு. இதனால் வேண்டுதல் வைத்து திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள், இங்கு வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி செல்கின்றனர்.கண்வ முனிவர், இந்த பகுதியில் அமர்ந்து திருமாலை வேண்டி தவம் செய்தார். அப்போது தேவகண்டன் என்ற அரக்கன் புலியுருவில் வந்து அவரது தவத்துக்கு இடையூறு செய்தான். முனிவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, வேடன் உருவில் வந்த சுவாமி, தன்னுடைய ‘டேங்கினி’ என்ற கட்கத்தை எறிந்து அவனைக் கொன்றார். இப்படி தன்னை வேண்டிய முனிவரின் துயரம் போக்க அரக்கனை வேட்டையாடிய திருமாலை ‘வேட்டையாடிய பிரான்’ என்று தேவர்களும், முனிவர்களும் கொண்டாடினர். கன்னட மக்கள், வேட்டையாடிய பிரானை பேட்டராய சுவாமி என்று வழிபட்டு வருகின்றனர் என்பது தலவரலாறு.இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சைத்ர மாதத்தில் 3 நாட்கள் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி ெபற்றது. இதையொட்டி தேவி, பூதேவி சமேத பேட்டராயசுவாமியின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, தேர்மீது அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து சவுந்தரவல்லி தாயார் தேர் முன்னால் செல்ல, பெரிய தேர் ஆடி அசைந்து தெப்பக்குளம் வரை ெசல்லும் காட்சியை காண கோடிக்கண் வேண்டும். இதில் தமிழகம், கர்நாடகம் என்று 2 மாநில மக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து செல்வது இன்றுவரை தொடர்கிறது.தேரோட்டத்தின் போது, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் தேர் மீது உப்பு மிளகு தூவியும், வாழைப்பழம் மற்றும் பூக்களை வீசியும் வழிபடுவர். இப்படி வழிபட்டால் எந்த காரியத்தையும் நிறைவேற்றி தருவார் பேட்டராயசுவாமி என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை. இதேபோல் தேரோட்ட விழாவையொட்டி நீர்மோர், அன்னதானம், இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை, விடியவிடிய பல்லக்கு ஊர்வலம் என்று திரும்பிய திசையெல்லாம் களை கட்டும்.மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பு வெகு விமரிசையாக நடக்கும். கிருஷ்ண ஜெயந்தியன்று நடக்கும் திருமஞ்சன உற்சவமும், மறுநாள் நடக்கும் உறியடி உற்சவமும் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு பிரமோற்சவ விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. |
திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: திரளான பக்தர்கள் தரிசனம் |
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.பெருமாளின் திருவடியை சரணடைந்த உயிர், எப்படி வீடு பேற்றை அடையும் என்பதை, பெருமாளே விளக்கி காட்டும் நிகழ்ச்சி தான் சொர்கவாசல் திறப்பு. இதில், நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சி கொடுப்பார். திருவள்ளூரில் உள்ள முக்கிய பெருமாள் கோயிலான வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க வாசல் திறக்கப்பட்டு, தேவி, பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கோயிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.காக்களூர் பூங்கா நகர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜலநாராயணர் ஆலயம், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் உட்பட பல்வேறு பெருமாள் கோயிலிலும் சொர்க வாசல் திறப்பு நடைபெற்றது.காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், அஷ்டபுஜம் பெருமாள் கோயில், பச்சைவண்ண பெருமாள் கோயில், பவளவண்ண பெருமாள் கோயில், உலகளந்தார் பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில், பாண்டவர் சமேத பெருமாள் கோயில், நிலாத்துண்டர், ஆதிகேசவ பெருமாள் கோயில், திருநீரகத்தான் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர். மேலும் உத்திரமேரூர் சுந்தர வரதரராஜ பெருமாள், திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோயில், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஞான தேசிங்க பெருமாள் கோயில் பழைய சீவரம், ஆத்தூர் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், சிங்கபெருமாள் கோயிலில் உள்ள பாடலாத்திரி நரசிங்க பெருமாள், திருவிடந்தை நித்திய கல்யாணபெருமாள் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள், பெருமாளை தரிசித்தனர். |
அண்ணாநகரில் துணிகரம் வக்கீல் வீட்டில் 28 பவுன் மாயம்: வேலைக்கார பெண்கள் கைவரிசையா? |
அண்ணாநகரில் வசித்துவரும் வக்கீல் வீட்டில் 28 பவுன் நகை மாயமானது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர் குமரேசன்(50). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல். இவரது வீட்டில் அஞ்சலி, விஜயா ஆகியோர் வீட்டு வேலை செய்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் இருவரும் சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளனர். திடீரென 2 பேருமே வேலைக்கு வராமல் இருந்தனர்.இந்த நிலையில், வீட்டில் உள்ள நகைகளை சோதனை செய்தபோது 28 பவுன் காணாமல்போனது தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். வேலையில் இருந்து நின்ற பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் மீது நேற்று ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் வீட்டில் நகைகள் திருடியது யார் என்று விசாரித்து வருகின்றனர். |
தமிழ்முரசு செய்தி எதிரொலி மாநகராட்சி வார்டு அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம் |
தமிழ்முரசு நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து அரும்பாக்கம் மாநகராட்சி வார்டு அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.சென்னை மாநகராட்சியின் 105வது வார்டுக்கு உட்பட்ட அலுவலகம் அரும்பாக்கம் கண்ணகி தெருவில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள அங்கன்வாடி மையத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். வார்டு அலுவலகத்தில் பல வருடங்களாக காவலாளி கிடையாது. அங்கன்வாடியில் சற்றுச்சுவர் இல்லாததால் அப்பகுதியில் மாடிக்கு சென்று சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இரவில் மது அருந்தி, கஞ்சா அடிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.இதனால் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாநகராட்சி உயரதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்று கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்முரசு நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்தநிலையில், அங்கன்வாடி மையத்துக்கு 5.5 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. |
சமஊதியம் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ம் தேதி தொழிற்சங்கம் போராட்டம் |
எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) மற்றும் ஏஐயுடிசி சார்பில், வரும் 8ம் தேதி 19வது அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நடந்தது. சங்க நிர்வாகிகள் கடற்கரைக்கு வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.அந்த துண்டு பிரசுரத்தில், “8 எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, பென்ஷன், பிஎப், குறைந்தபட்ச ஊதியம் ₹21,000 வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 6000 வழங்கவேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர் சட்டங்களை அமுலாக்கல், சமவேலைக்கு சம ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு, முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள், அந்நிய நேரடி மூலதனத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய இணைத்த யூனியன் சென்டர் (ஏஐயுடியுசி) உட்பட மத்திய தொழிற்சங்கங்கள் வரும் 8ம்தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. |
விற்பனையை விட செலவு அதிகம் அம்மா உணவகங்களுக்கு 483 கோடி இழப்பு |
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்து செலவு அதிகமானதால் கடந்த 6 ஆண்டுகளில் 483 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்குவதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசாணையில் கூறியிருப்பதாவது: அம்மா உணவகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மானிய விலையில் 350 டன் கோதுமை மற்றும் 740 டன் அரிசி வழங்கப்படுகிறது. இதன்படி அரிசி கிலோ ₹1 க்கும், கோதுமை கிலோ ₹17.25க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவுத் துறையின் முதன்மை செயலாளர் சென்னை மாநகராட்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான பொருளாதார விலை அடிப்படையில் வித்தியாச தொகை அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று பொது கணக்கு தணிக்கை துறையினர் தணிக்கை தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 30.6.2017 வரை அம்மா உணவகங்களுக்கு வழங்கப்பட்ட அரிசிக்கான வெளிசந்தை பொருளாதார விலை ₹46 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்தில் சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட ₹2 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 545 போக மீதமுள்ள வித்தியாச தொகையான 44 கோடியே 1 லட்சத்து 79 ஆயிரத்து 490 ஐ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கணக்கில் செலுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணையரை கேட்டுக் கொண்டார். 19.2.2013 முதல் 2018-19 வரை 407 அம்மா உணவகங்களின் விற்பனை தொகையை (₹184.86) விட செலவுத் தொகை (₹661.61 கோடி) அதிகமாக உள்ளது. அதாவது, ₹483.75 கோடி அதிகம் (இழப்பு) உள்ளது. இந்த செலவுத் தொகை முழுவதும் சென்னை மாநகராட்சி செலவீனத்தில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கடும் நிதி சுமையில் அம்மா உணவகங்களை நடத்திவரும் நிலையில் அரிசி, கோதுமை கொள்முதல் செய்ததற்காக நுகர்பொருள் வாணிப கழகம் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாச தொகையான முறையே ₹44,01,79,490.80 மற்றும் ₹1,93,15,250.00 ஐ வழங்குவது சென்னை மாநகராட்சிக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தும். எனவே சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்குவது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது கொள்முதல் செய்வதற்கான அரிசி ₹71 கோடியே 89 லட்சத்து 46 ஆயிரத்து 253 மற்றும் கோதுமைக்கு ₹1 கோடியே 93 லட்சத்து 15 ஆயிரத்து 250 ஐ நுகர்பொருள் வாணிப கழகம் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாச தொகைக்கு முழுமைக்கும் விலக்கு அளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் கருத்துருவை அரசு விரிவாக ஆய்வு செய்து இந்த திட்டம் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணையின்படி திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டதை மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என்று ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. |
செங்கல்பட்டில் சோகம் கார் கவிழ்ந்து கணவன் பலி மனைவி, மகள் படுகாயம்: மற்றொரு விபத்தில் முதியவர் பலி |
செங்கல்பட்டு அருகே கார் கவிழ்ந்து கணவன் பரிதாபமாக இறந்தார். மனைவி, மகள் படுகாயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (51). இவரது மனைவி பவானி (48), மகள் வானதிதேவி (14). இவர்கள் நேற்று மதியம் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். செங்கல்பட்டு பைபாஸ் சாலை ஐயப்பன் கோயில் அருகே வந்தபோது, திடீரென கார் பழுதாகி தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இளங்கோ, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவானி, வானதிதேவி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.* திருநின்றவூரை சேர்ந்தவர் ரவி (60). உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் வசித்த இவரது உறவினர், நேற்று இறந்து விட்டார். அதற்கு சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் ரவி. செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த ஒரு வாகனம், பைக் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த ரவி, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், வரும் வழியிலேயே ரவி இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். |
பூச்சி மருந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை |
உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு. விவசாயி. இவரது மகள் தேவிபிரியா (19), திருப்புலிவனத்தில் உள்ள அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில், எந்த வேலையும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய தேவிபிரியாவை, பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த தேவிபிரியா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, தேவிபிரியாவை மீட்டு மானாம்பதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி தேவிபிரியா உயிரிழந்தார்.இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
நிதி நெருக்கடியில் தமிழக அரசு: மத்திய அரசிடம் நிதியுதவி பெற முடிவு |
தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்பை கட்டுப்படுத்த உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டாம். அதற்கு பதில் மத்திய அரசிடம் நிதியுதவி பெற்று பொதுப்பணித்துறையின் பணிகளை மேற்கொள்ளுமாறு பொறியாளர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழகத்தில் பொதுப்பணித்துறை மூலம் ஏரி, அணைகள் புனரமைத்தல், அணைகள் கட்டுதல், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பெரிய அளவிலான திட்டப்பணிகள் என்றால் மத்திய அரசின் நிதியுதவி பெற்று பணிகள் மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, ஏஐபிபி, ஆர்ஆர்ஆர் திட்டம், வெள்ள மேலாண்மை முகமை, தேசிய நீர் மேம்பாட்டு முகமை உள்ளிட்டவற்றின் மூலம் நிதியை பெற்று இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக ஏரி, அணை புனரமைப்பு பணிக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கியின் மூலம் நிதியுதவி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தற்போது, மட்டும் ₹10 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பெற கடன் மூலம் நீர்வளநிலவள திட்டம், அணைகள் புனரமைப்பு, குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதேசமயம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ₹150 கோடி மத்திய அரசிடம் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, 3.50 லட்சம் கோடி வரை தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து கடன் பெற்று இது போன்ற திட்ட பணிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் அரசு கூடுதல் நிதி நெருக்கடியில் சிக்கும். எனவே, நதிகள் இணைப்பு திட்டம், ஏரிகள் புனரமைப்பு திட்டம், தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு உலக வங்கியிடம் கடன் பெறுவதற்கு பதிலாக மத்திய அரசின் நிதியை பெற முயற்சிக்க தமிழக அரசு அறிவரை வழங்கியுள்ளது. |
பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் நேர பலகைகள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை |
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் நேரப் பலகைகளை அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: முதல் வழித்தட திட்டத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில்களின் வருகை குறித்த டிஜிட்டல் நேரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. நிலையங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரயில் வரும் நேரம் தெரியும். எனவே, டிஜிட்டல் நேரப் பலகைகளை விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் மெட்ரோ ரயில்களின் டிஜிட்டல் நேரப் பலகைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. பயணிகள் வருகை அதிகம் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் இந்த டிஜிட்டல் நேரப் பலகைகளை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல், எழும்பூர், நந்தனம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் நிறுவுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார். |
வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் அதிமுக பெண் கவுன்சிலருக்கு சிக்கல் |
வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் இருப்பதாக அதிமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. எனவே தலைவர் தேர்தலில் அவர் வாக்களிக்க தடை வாங்க திமுக முடிவு செய்துள்ளது.இது குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:திருப்பூர் ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கல்பனா மொத்தம் 3,136 வாக்குகள் பெற்று ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். கல்பனா மீது தற்போது திடீர் சர்ச்சை எழுந்துள்ளது. கல்பனாவின் பெயர் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும், திருப்பூர் மாநகராட்சி 29வது வார்டு பாகம் எண் 814ல் இடம் பெற்றுள்ளது.ஒரு வேட்பாளர் இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது குறித்து திமுக தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.மேலும் உயர் நீதிமன்ற வக்கீல்களோடு ஆலோசனை செய்து ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் அவர் வாக்களிக்க தடை வாங்க உள்ளோம்.அவ்வாறு வாக்களிக்க தடை கிடைக்கும் பட்சத்தில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை, சுயேச்சை கவுன்சிலர் ஆதரவோடு திமுக கைப்பற்றும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். |
வேட்டி வார தினத்தை மறந்த கோ ஆப்டெக்ஸ் அதிகாரிகள் |
வேட்டி வார தினத்தை கோ ஆப்டெக்ஸ் அதிகாரிகள் மறந்துவிட்டதால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதற்கு அதிகாரிகள் அலட்சியம் மற்றும் நிர்வாக குளறுபடியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் வேட்டி, சட்டை, போர்வை, சேலை, போர்வை உட்பட பல்வேறு ரகங்களில் ஜவுளி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களும் வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 2014ல் கோஆப்டெக்ஸ் நிறுவன இயக்குனராக இருந்த சகாயம் விற்பனையை பெருக்க கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் வேட்டி வார தினமாக கொண்டாட உத்தரவிட்டார்.அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை வேட்டி தினமாக கடைபிடிக்கப்பட்டு அந்த தினத்தில் அரசு அலுவலகங்களில் தள்ளுபடி விலைக்கு வேட்டி விற்பனை செய்யப்பட்டு, அரசு ஆண் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வேட்டி அணிந்து வரும் நிலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் வேட்டி விற்பனை அதிகரித்தது மட்டுமின்றி, கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மீது அரசு ஊழியர்கள், மக்களுக்கும் நன்மதிப்பு ஏற்பட்டது.இதன் மூலம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் விற்பனையும் பன்மடங்கு அதிகரித்தது. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வேட்டி வார தினத்தை கொண்டாட கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் மறந்து விட்டது.இதே போன்று கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதன் விளைவாக அதன் விற்பனை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி கோ ஆப்ெடக்ஸ் விற்பனை நிலையங்களில் ஜவுளி பொருட்களை வாங்க பொதுமக்கள் ேபாதிய ஆர்வம் காட்டாததால் விற்பனை சரிந்தது.இது போன்று தொடர்ந்து விற்பனை சரிவை சந்தித்து வருவதன் மூலம் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம், விற்பனை நிலையங்களை ஒவ்வொன்றாக மூடி விடும் சூழ்நிலை ஏற்படும். |
24 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 1217 கோடி பாக்கி |
தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய எஸ்ஏபி பாக்கி ₹1217 கோடியை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அறிவித்து வழங்கி வந்த கரும்பு பரிந்துரை விலையில் (எஸ்ஏபி) 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மூன்று ஆண்டுகளுக்கு ₹209 கோடி விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு விவசாய சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதே போல 2015-16ம் ஆண்டு எஸ்ஏபி பாக்கி ₹87 கோடி, 2016-17ம் ஆண்டு எஸ்ஏபி பாக்கி ₹80 கோடியையும், அடுத்தடுத்து கொடுத்து விடுவதாக மாநில அரசு சார்பில் சர்க்கரை துறை ஆணையும் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகால எஸ்ஏபி பாக்கி ₹209 கோடி கிடைக்கும். 24 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய எஸ்ஏபி பாக்கி ₹1217 கோடி எஸ்ஏபி பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
கரூர் அருகே தொழிலதிபர் மனைவி எரித்து கொலை?: கருகிய நிலையில் உடல் மீட்பு |
கரூர் அருகே தொழிலதிபர் மனைவி தீப்பற்றி உடல் எரிந்த நிலையில் கிடந்தார். எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பாடி பஞ்சாயத்தை சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. திருச்சியில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா(27).இந்நிலையில் நேற்று பிரியா அவரது வீட்டில் மர்மமான முறையில் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் கூறுகையில், எரிந்த நிலையில் பிரியா உடல் கிடந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவருக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி மூன்று வருடம் ஆவதால் இது தொடர்பாக கரூர் ஆர்டிஓ விசாரணை நடை பெறுகிறது என தெரிவித்தனர். |
அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி காவலர்களிடம் 2 கோடி சுருட்டிய போலீஸ்காரர் கைது |
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (38). இவர் பெரம்பலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஓட்டல் உரிமையாளர் கார்த்திக் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கார்த்திக் நடத்தி வந்த ஓட்டலில் ஆயுதப்படை காவலர் சந்திரமோகனும் பங்குதாரராக இணைந்து கொண்டார். சாதாரண ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் சந்திரமோகனிடம் அளவுக்கு அதிகமான பணப்புழக்கம் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன் ஓட்டல் உரிமையாளரான கார்த்திக் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில், தன்னோடு நட்பாக பழகிய சந்திரமோகன், தன்னிடம் பல லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை ஏமாற்றி, தனது காரை பறித்துக்கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில், ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து வரும் சந்திரமோகன் அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள போலீசார் பலரிடம், தன்னிடம் பணம் கொடுத்தால் குறைந்த நாளில் அதிக வட்டிப் பணம் பெற்றுத் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ₹2 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்தது.காவல் துறையில் சக காவலராக பணிபுரியும் நபர் மீது எப்படி புகார் தெரிவிப்பது, புகார் கொடுத்தால் தனக்கு மேலிடத்து கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே, இதனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என ஆயுதப்படை வளாகத்தில் கடந்த சில மாதங்களாக அனைத்து போலீசாரும் குமுறி வந்த நிலையில் ஓட்டல் உரிமையாளரின் புகார், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஆயுதப்படை காவலர் சந்திர மோகன், தனது சக பங்குதாரரான ஓட்டல் உரிமையாளர் மற்றும் சக போலீசாரிடம் ₹2 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வளர்மதி நேற்று ஆயுதப்படை காவலர் சந்திர மோகனைக் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.மேலும் சந்திரமோகன் பயன்படுத்தி வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு புல்லட் பைக் ஆகியவற்றையும் பறிமுதல்செய்து அவற்றையும் நீதி மன்றத்தில் ஒப்படைத்தார். |
வாக்காளர் பட்டியலில் மெகா குளறுபடி 11 இடங்களில் ஒரே வாக்காளர் பெயர், படம் |
ஈரோட்டில் வாக்காளர் பட்டியலில் 18வது வார்டில் ஒரே வாக்காளர் பெயர் 11 இடத்தில் இடம் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 9 லட்சத்து 24 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 64 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும், 79 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளனர்.இதைத்தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவம், பெயர், போட்டோ திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் பாகம் 109ல், முனியப்பன் கோயில் வீதி, நேதாஜி நகர், விஎன்எம் சின்ன கவுண்டர் நகர் பகுதிக்கான வாக்காளர் பட்டியலில், வரிசை எண் 42ல் இருந்து 52 வரை 11 இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் வாக்காளர் அடையாள அட்டை எண் மாறுபட்டுள்ளது. ஆனால், பெயர், முகவரி, வயது, வாக்காளர் படம் என ஒரே மாதிரியாக இடம்பெற்றுள்ளது. 11 இடத்தில் இடம்பிடித்த வாக்காளர் பெயர் ரகுபதி(56), தந்தை பெயர் வெங்கடாசலம் என்பதாகும்.இது குறித்து 18வது வார்டு அரசியல் கட்சியினர் கூறுகையில், ‘‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட பாகம் 109ல் வாக்காளர் பட்டியில் 11 இடத்தில் ஒரே வாக்காளர் பெயர் மற்றும் புகைப்படம் இடம் பிடித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதுபோன்ற குளறுபடியை விரைந்து தேர்தல் அலுவலர்கள் சரி செய்ய வேண்டும்’’ என்றனர். |
அமித்ஷா பற்றி விமர்சனம் சமூக ஆர்வலர் கைது |
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான ஒருமித்த கருத்துக் கொண்ட பல இயக்கத்தினர் சேர்ந்து தூத்துக்குடியில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விசிக அகமது இக்பால், எஸ்டிபிஐ காதர்மைதீன் உள்ளிட்ட 210பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் அமைப்புசாரா தொழிலாளர் இயக்க நிர்வாகியுமான கிருஷ்ணமூர்த்தி (46), மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.இதுகுறித்து தென்பாகம் போலீசில் பாலமுருகன் என்பவர் புகார் செய்தார். இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி மீது இபிகோ 504,505(2),506(2) மற்றும் 154 (அ) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பொது அமைதிக்கு எதிராக மக்களை தூண்டுதல், பொதுமக்களில் ஒரு பிரிவினருக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக பேசுதல், கொலை மிரட்டல் மற்றும் சமயம், இனம்,மொழி, குடியிருப்பிடம் அடிப்படையில் மக்கள் மத்தியில் பகைமையை வளர்த்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்தனர். |
உள்ளாட்சி தேர்தல் தோல்வி அதிமுக மீது தேமுதிக பாய்ச்சல்: விழுப்புரத்தில் கூட்டணி டமால் |
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியதாவது:தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து மக்கள் அளித்துள்ள முடிவுகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா நம் வெற்றியை குறைத்துவிட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் நம் கூட்டணி அபார வெற்றிபெற்றது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினரிடையே ஒற்றுமையும், வேகமும் இருந்தது. ஆனால் உள்ளாட்சியில் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லை. இதனை ஒருங்கிணைப்பு செய்யவேண்டிய அதிமுகவும் அந்த வேலையை செய்யவில்லை. தேமுதிகவுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அதிமுக கொடுக்கவில்லை. மேலும் சீட்டு கொடுத்துவிட்டு, தேமுதிக நிற்கும் அதே பகுதியில் அதிமுகவினர் சிலரை சுயேச்சையாகவும் களமிறக்கினார்கள். மேலும் பல இடங்களில் அதிமுக சின்னங்களையும் வழங்கி போட்டியிட வைத்தார்கள். உள்ளாட்சி தேர்தலில் நாம் வஞ்சிக்கப்பட்டோம். தேமுதிகவை குறைத்த எடைபோட வேண்டாம், எங்களது பலத்தையும், வாக்கு வங்கிகளையும் நிரூபிக்க தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதனிடையே கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், அதிமுகவினர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டணி கட்சிகள் சீட்டு பேசாத, ஒதுக்கீடு செய்யாத நிலையில் ஓட்டுகேட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர். அதற்கு மாவட்ட செயலாளர் நீங்களும் அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் பகுதியில் அவர்களை எதிர்த்து பிரசாரத்தை தொடங்குங்கள் என்று கூறினார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடும் பகுதியில் தேமுதிக எதிர்த்து களமிறங்கும் என தெரிகிறது. |
குளிக்கும் போது படம் பிடித்து பெண்ணை மிரட்டி நகைபறிப்பு: வாலிபருக்கு வலை |
குளிக்கும் போது ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து, உறவுக்கார பெண்ணை மிரட்டி 48 பவுன் நகைகளை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை, பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது உறவினர் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த கஜேந்திரன். இவர், மதுரையில் உள்ள பார்வதியின் வீட்டிற்கு வந்துள்ளார். உறவினர் என்பதால் பார்வதி அவரை வரவேற்று உபசரித்துள்ளார். சில நாட்கள் பார்வதியின் வீட்டில் தங்கியிருந்த கஜேந்திரன், குளிக்கும் போது, பார்வதியை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அதனை வைத்துக் கொண்டு அடிக்கடி அவரை மிரட்டி பணம் வாங்கி வந்தார்.பார்வதியால், தொடர்ந்து பணம் கொடுக்க முடியவில்லை. ‘‘பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னிடம் இருக்கும் நகைகளை கொடு. இல்லையென்றால் உனது குளியல் படங்களை வலைத்தளங்களில் பரப்பி விடுவேன்’’ என சொல்லி கஜேந்திரன் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன பார்வதி, தனது கணவருக்கு தெரியாமல் மொத்தம் 48 பவுன் நகைகளை கஜேந்திரனிடம் கொடுத்துள்ளார்.அந்த நகைகளை வாங்கிய பின்பு, கடந்த 4ம் தேதி மதுரை வந்த கஜேந்திரன், பார்வதியிடம் மீண்டும் நகைகளை கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அவர், தனது கணவரிடம் நடந்த விபரங்களை எடுத்து கூறினார். பின்னர் பார்வதி கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஜேந்திரனை தேடி வருகின்றனர். |
பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி |
விழுப்புரம் மாவட்டம் சென்னகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). இவரது நண்பர் மகேந்திரன் (39). இருவரும் இன்று காலை 6 மணிக்கு இருசக்கர வாகனத்தில் மயிலம் கோயிலுக்கு சென்றனர். மயிலம் அருகே செண்டூர் கிராம தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலையை கடந்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். |
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா... தோற்ற வேட்பாளர் புலம்பல் போஸ்டர் |
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வாலிபரின் போஸ்டர் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் உடன்குடி யூனியன் மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிரித்திலால் ஜெயரஞ்சன், கிறிஸ்டோபர் பிரசாந்த், ஜெரால்டு ஆகியோர் போட்டியிட்டனர்.இதில் பிரித்திலால் ஜெயரஞ்சன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்த தேர்தலில் தோல்வியடைந்த வாலிபர் ஜெரால்டு, தனது மனக்குமுறலை போஸ்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதில் ‘’பணம் வென்று விட்டது, பாசம் தோற்று விட்டது. மெஞ்ஞானபுரம் 5வது வார்டு உறுப்பினருக்கு நடந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த 98 நபர்களுக்கு மட்டும் மிக்க நன்றி, மண்ணின் மைந்தன், உங்கள் வீட்டுப்பிள்ளையை தோற்கடித்த 5வது வார்டு மக்களுக்கும் நன்றி. என்னம்மா இப்ப பண்ணிட்டிங்களேம்மா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூகவலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. |
முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம் |
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான இஸ்லாமியர், இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. புகழ்பெற்ற இந்த தர்காவின் பெரியகந்தூரி விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டின் 718வது பெரிய கந்தூரி விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை சந்தன கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. நேற்றிரவு 10.30 மணிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனங்கள் நிரப்பிய குடங்களை தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை வலம் வந்தது. அங்கு திரண்ட அனைத்து தரப்பு மக்களும் பூக்களை வாங்கி தங்களின் வேண்டுதலை வேண்டி சந்தனக்கூடு மீது வீசி பிராத்தனை செய்தனர்.பின்னர் இன்று அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டும்மின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். |
இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேர் கைது |
இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது கணவர் மற்றும் மகள் இங்குள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள தாயை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்ற இளம்பெண் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை சிலர் ஆட்டோவில் கொண்டு வந்து வீட்டின் முன்பு போட்டு சென்றனர். அவர் மயங்கிய நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் காணப்பட்டார்.உடனடியாக அவரை உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி உடன்குடியை சேர்ந்த மணிகண்டன்(23), திருச்செந்தூரை சேர்ந்த ஐயப்பன்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். |
Subsets and Splits